எதிர்க்கேள்விகள்

 எதிர்க்கேள்விகள்..
==================================
இஸ்லாம் கேள்விகள் கேட்பதை ஊக்குவிக்கின்றது...

அநாவசிய ,அறிவற்ற கேள்விகளுக்கு தடை இருந்தாலும், நம்பிக்கையை அதிகரிக்க, சந்தேகங்களில் இருந்து தெளிவடையச் செய்யும் கேள்விகளை இஸ்லாம் ஊக்குவிக்கிறது..

இப்ராஹிம் அலை அவர்கள் இறைவனிடம் உயிர்ப்பித்தலைப்பற்றி கேட்ட கேள்வியில் இந்தநடைமுறை ஆரம்பிக்கிறது..

அல்லாஹ் அதை அங்கீகரித்தான்..
அழகிய முறையில் பதிலளித்தான்..

குறைஷிகள் பலரும் நபிகளாரிடம் கேள்வி கேட்டுள்ளனர்..
யூதர்களில் பலரும் பல சந்தர்ப்பங்களில் நபியவர்களிடம் கேள்விகள் கேட்டுள்ளனர்..

நபிகளார் என்னிடமே கேள்வி கேட்பதா??
தூதரிடமே கேள்வியா??
கேள்வி கேட்க நீங்கள் அறிஞரா??
என்றெல்லாம் நபிகளார் எப்போதும் கேட்டதில்லை..

அழகிய முறையில் பதில் தந்தார்கள்..
அந்த அணுகுமுறையே இஸ்லாத்தில் அவர்களை கொண்டு சேர்த்தது..
===================================

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூத அறிஞர் ஒருவர் வந்து, முஹம்மதே! அஸ்ஸலாமு அலைக்க! என்று (முகமன்) கூறினார். உடனே நான் அவரைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். அவர் நிலை தடுமாறி விழப்போனார். அவர், ஏன் என்னைத் தள்ளுகிறாய்? என்று கேட்டார். நான்,அல்லாஹ்வின் தூதரே! என்று நீர் சொல்லக்கூடாதா (முஹம்மத் என்று பெயர் கூறி அழைக்கிறீரே)? என்று கேட்டேன். அதற்கு அந்த யூதர், அவருடைய குடும்பத்தார் அவருக்கு இட்ட பெயரால்தான் அவரை நாம் அழைக்கின்றோம் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனது பெயர் முஹம்மத் தான். இதுவே என் குடும்பத்தார் எனக்கு இட்ட பெயர் என்று சொன்னார்கள். அந்த யூதர், உங்களிடம் நான் (சில விஷயங்கள் குறித்து) கேட்பதற்காகவே வந்தேன் என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் கூறப்போகும் எந்த விஷயமும் உமக்குப் பயனளிக்குமா? என்று கேட்டார்கள். அவர், நான் காது கொடுத்துக் கேட்பேன் என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறியவாறு (ஆழ்ந்த சிந்தனையுடன்), கேளுங்கள்! என்றார்கள்.

அந்த யூதர், இந்த பூமியும் வானங்களும் இப்போதுள்ள அமைப்பல்லாத வேறோர் அமைப்பிற்கு மாற்றப்படும் (விசாரணை) நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அஸ்ஸிராத் எனும்) பாலத்திற்கு அருகே இருளில் அவர்கள் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள். அவர்,மக்களிலேயே முதன்முதலில் (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்கள் யார்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏழை முஹாஜிர்கள் என்று பதிலளித்தார்கள். அந்த யூதர், அவர்கள் சொர்க்கத்துக்குள் நுழையும்போது அவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி என்ன? என்று கேட்டார். அதற்கு மீனின் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித்துண்டு என்று பதிலளித்தார்கள். அதற்கடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என்ன? என்று அவர் கேட்க,சொர்க்கத்தின் ஓரங்களில் மேய்ந்துகொண்டிருக்கும் காளைமாடு அவர்களுக்காக அறு(க்கப்பட்டு விருந்தளி)க்கப்படும் என்று பதிலளித்தார்கள். அதற்குப் பின் அவர்கள் எதை அருந்துவார்கள்? என்று அவர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அங்குள்ள ஸல்ஸபீல் என்றழைக்கப்படும் நீரூற்றிலிருந்து (அருந்துவார்கள்) என்று பதிலளிக்க, அவர் நீர் கூறியது உண்மையே என்று கூறினார்.

பிறகு பூமியில் வசிப்பவர்களில் ஓர் இறைத்தூதர் அல்லது ஓரிரண்டு மனிதர்கள் தவிர வேறெவரும் அறிந்திராத ஒரு (குறிப்பிட்ட) விஷயத்தைப் பற்றிக் கேட்கவே நான் உம்மிடம் வந்தேன் என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் கூறப்போகும் விஷயம் உமக்குப் பயன் தருமா? என்று கேட்டார்கள். அவர் நான் காது கொடுத்துக் கேட்பேன் என்றார். பிறகு அவர், குழந்தை(யின் பிறப்பு) குறித்துக் கேட்பதற்காக நான் உம்மிடம் வந்தேன் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆணின் நீர் (விந்து) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன)நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவையிரண்டும் சேரும்போது ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்துவிட்டால், அல்லாஹ்வின் நியதிப்படி ஆண் குழந்தை பிறக்கும். (இதற்கு மாறாக) பெண்ணின் நீர் (சினை முட்டை), ஆணின் நீரை (விந்து உயிரணுவை) மிகைத்துவிட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி பெண் குழந்தை பிறக்கும் என்று பதிலளித்தார்கள்.

அந்த யூதர், நீர் சொன்னது உண்மைதான். நிச்சயமாக நீர் ஓர் இறைத்தூதர் (நபி)தாம் என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் எவற்றைக் குறித்து என்னிடம் கேட்டாரோ அவற்றைக் குறித்து நான் ஏதும் அறியாதவனாகத்தான் இருந்தேன். அல்லாஹ்தான் அவற்றை எனக்கு அறிவித்துத்தந்தான் என்று கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 525.
===================================

இன்று, கேள்விகள் கேட்பவர்களுக்கு பதிலளிக்காமல் தனிநபர் விமர்சனங்கள் , அநாகரிக சொல்லாடல்களை பயன்படுத்துவது முகநூல் ஆலிம்களின் போக்காக இருப்பது வேதனையளிக்கிறது..

எந்த இயக்கத்தில் உள்ளவர்களாகவோ, கொள்கை சார்ந்தவர்களோ இருக்கலாம் ஆனாலும் அனைவரும் கலிமாவை மொழிந்தவர்கள் தானே?!!

ஈமான் இல்லாத யூதர்களிடமும் காபிர்களான குரைஷிகளிடமும் காட்டிய நபிகளாரின் அணுகுமுறையை ஏன் கலிமா மொழிந்த முஸ்லிம்களிடம் காட்டுவதில்லை...?

நபிகளாரை விடவும் நாம் அறிந்தவர்கள் இல்லை
நமது கல்வி கைப்பிடி அளவுதவிர அதிகமில்லை...
யார் கேள்வி கேட்பினும் அழகிய முறையில் பதிலளிக்க வேண்டும்
பதில் இல்லை எனில் தேட வேண்டும்
நமது நிலைப்பாடு தவறு எனில் திருந்திக்கொள்ள வேண்டும்

இதுவே இறைவனை நம்பும் முஃமின்களின் பண்பாக இருக்க முடியும்..

இதைத்தவிர்த்த எதிர்வினைகள் முகநூலில் பயனளிக்கலாம்
லைக் கமண்ட் களை பெற்றுத்தரலாம்
ஆனால் மறுமையில் கூலி பெற்றுத்தராது..

Comments